தமிழ்நாடு

"தமிழ்நாடு யாருடன் போராடும்?" - ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

top-news

'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி பயன்படுத்தி வரும் நிலையில், "தமிழ்நாடு யாருடன் போராடும்?" என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

ஆளுநரின் கேள்வி:

சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலார் பிறந்தநாள் விழா சனிக்கிழமை (அக்டோபர் 4, 2025) நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "நான் மாநிலம் முழுவதும் பயணிக்கும்போது, 'தமிழ்நாடு போராடும்' என்று சுவர்களில் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன். யாருடன் போராடும்? தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை, இங்கு எந்தச் சண்டையும் இல்லை. நாம் அனைவரும் சகோதரர்கள்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முழக்கத்தை விமர்சிக்கும் வகையில் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பதில்:

ஆளுநரின் இந்தக் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் உடனடியாகப் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

“'தமிழ்நாடு யாருடன் போராடும்?' என ஆளுநர் கேட்டுள்ளார். இந்தி மொழியை ஏற்றால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!” என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

மேலும், அவர் அளித்த பதிலில், தமிழ்நாடு போராடும் விஷயங்களாகக் கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிட்டுள்ளார்:

உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்களுக்கு எதிராகப் போராடும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்.

அரசியல்சட்டத்தின் மாண்பைச் சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்.

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்.

தமிழ்நாட்டின் அரசியல் வலிமையைக் குறைக்கப் போடப்படும் மறுசீரமைப்புச் சதிக்கு (Delimitation) எதிராகப் போராடும்.

மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கேட்கும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும்.

இறுதியில், "ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கவே இறுதியில் தமிழ்நாடே வெல்லும்!" என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

தமிழக ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கின் சமீபத்திய வெளிப்பாடாக இந்தக் கருத்துப் பரிமாற்றம் அமைந்துள்ளது.