தமிழ்நாடு

12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... எங்கெல்லாம் தெரியுமா...?

top-news

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், இன்றும், நாளையும் (அக்டோபர் 5 மற்றும் 6) மாநிலத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அநேக இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் பலி
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

விருதுநகர் மற்றும் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்றுக் (அக்டோபர் 4) காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

விருதுநகர் அருகே, இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு குடும்பத்தினர், ஓடையைக் கடக்க முயன்றபோது திடீர் வெள்ளத்தில் சிக்கினர். இதில், 6 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் மற்றும் தந்தையின் கண் முன்னே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றவர்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளம் அபாயம் உள்ள பகுதிகளை பொதுமக்கள் கடக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.