தமிழ்நாடு

இருசக்கர வாகனம் மீது மோதிய விவகாரம்.. விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

top-news

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த பெருந்துயர் சம்பவம் தொடர்பாக, நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பிறகு, விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பரப்புரை வாகன விபத்து: நீதிமன்றம் சரமாரி கேள்வி

கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தவெக மற்றும் அரசு தரப்பிற்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக, விஜய்யின் பரப்புரை வாகனம் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதற்கான காணொளிகள் வெளியான பிறகும், அது தொடர்பாக ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கடுமையாகக் கேள்வி எழுப்பியது.

"விபத்து நடந்ததை ஓட்டுநரும், கட்சித் தலைவரும் பார்த்த பிறகும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றது கண்டிக்கத்தக்கது. கட்சித் தலைவரின் மனநிலையையே இது காட்டுகிறது" என்று நீதிபதி செந்தில்குமார் மிகக் கடுமையாக விமர்சித்தார்.

இதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற உத்தரவின் பேரில், விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது 'மோதிவிட்டு நிற்காமல் செல்லும் (Hit-and-Run) விபத்து' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், விசாரணைக்காக விஜய்யின் பரப்புரை வாகனத்தையும் (பேருந்தையும்) கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு
மேலும், கரூரில் ஏற்பட்ட 41 உயிரிழப்புகள் சாதாரண விபத்து அல்ல என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க, வடக்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவில் அனுபவம் வாய்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் (SP) உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு கரூரில் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உள்ளூர் காவல்துறை குழுவிடம் ஒப்படைத்துள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கரூரில் நடந்த பெருந்துயரத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.