தமிழ்நாடு

கரூர் துயர சம்பவம்: 'சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம்' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

top-news

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் தொடர்பாக, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு செயல்படுவதாகவும், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) மூலம் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இன்று (அக்டோபர் 4) வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.

உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன்மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

இந்த விவகாரத்தில் அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும்.

துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்.

மேலும், கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக, துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள் என அனைவருடனும் கலந்தாலோசித்து, ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்' (Standard Operating Procedures - SOP) வடிவமைக்கப்படும் என்றும், இது ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக அமையும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கரூரில், தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.