சென்னை: தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ திட்டத்தை தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் இடம்பெறலாம் என்று நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் இனியன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த பொது நல மனுக்களில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விளம்பரங்களில் அரசு முத்திரையுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது எனக் கூறப்பட்டிருந்தது. அரசின் திட்டங்களை தனிப்பட்ட அரசியல் சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறு என்றும், இந்த திட்டம் முற்றிலும் அரசியல் நோக்கத்துடன் நடக்கிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்த திட்டத்தில் தன்னார்வலர்கள் எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலும் திமுகவினர் மட்டுமே செயல்படுகிறார்கள் என்றும் தேர்தல் பிரசாரத்திற்காக அரசு பணம் வீணாகிறது என்றும் வாதிட்டனர்.
இதனால், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விளம்பரத்தில் கருணாநிதி புகைப்படத்தைப் பயன்படுத்தவும், ஸ்டாலின் பெயரைத் திட்டத்துடன் இணைக்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரினர். இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸ்வா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சிவி சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயண், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்படுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும், அரசு விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம்பெறக்கூடாது என்றும் வாதிட்டார்.
அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு விளம்பரங்களில் முதல்வர் மற்றும் துறை அமைச்சர்களின் புகைப்படங்கள் இடம்பெறலாம் என விளக்கம் அளித்தார். மனுதாரர்கள் காட்டும் புகைப்படங்கள் அரசு விளம்பரங்கள் அல்ல என்றும், அரசு விளம்பரங்களில் செய்தி விளம்பரத் துறையின் சீரியல் எண் இடம்பெறும் என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், முந்தைய ஆட்சியில் ‘அம்மா கேன்டீன்’ போன்ற திட்டங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்டதை எடுத்துக்காட்டினார். மத்திய அரசு ‘நமோ’ திட்டம், ஆந்திராவில் ‘ஜெகன்’ திட்டம் ஆகியவையும் இதற்கு உதாரணம் எனக் கூறினார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் திமுகவுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் மேலான விசாரணை பத்து நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம், ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


