தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 3, 2025) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல் சின்னம் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது.
முக்கிய வானிலை நிலவரங்கள்:
வங்கக்கடல் தாழ்வு மண்டலம்: நேற்று (அக்டோபர் 2) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாலை நேரத்தில் தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் கோபல்பூருக்கு அருகில் கரையை கடந்தது.
அரபிக்கடல் புயல் எச்சரிக்கை: சௌராஷ்ட்ரா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அக்டோபர் 1-ம் தேதி காலை வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நகர்ந்து, அன்றிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 3) காலை குஜராத்தில் உள்ள துவாரகாவிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 240 கி.மீ. தொலைவில் நிலைக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க: "மணிப்பூர், கும்பமேளா கலவரங்களுக்குச் செல்லாத பாஜக கரூருக்கு வருவது அரசியல் ஆதாயம் தேடவே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
அடுத்தகட்ட நகர்வு: இது, அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த வானிலை மாற்றங்களின் காரணமாகவே தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


