தமிழ்நாடு

பருவமழை முன்னேற்பாடுகள்: டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

top-news

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 2, வியாழக்கிழமை) காணொலிக் காட்சி வாயிலாக டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

முக்கிய அறிவுறுத்தல்கள்:

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் பணிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

அதிகரித்துள்ள மகசூல் காரணமாக, விவசாயிகளிடம் இருந்து எவ்வித தாமதமுமின்றி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள் மட்டுமின்றி, வேளாண் துறையின் கிடங்குகள் உட்பட பிற துறைகளின் சேமிப்புக் கிடங்குகளையும் தேவைப்படும் இடங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

பருவமழைக் காலத்தில் நெல் சேதமடையாமல் பாதுகாப்பது மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் தற்போதைய நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு மற்றும் உரங்கள் இருப்பு ஆகியவை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து முதலமைச்சரிடம் விளக்கினர்.