தமிழ்நாடு

திருப்பூரில் பரபரப்பு: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தூய்மைப் பணியாளர் கைது !

top-news



திருப்பூர் மாவட்டம் கே.வி.ஆர். நகரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை 4 மணியளவில், பள்ளியில் கல்வி பயிலும் சிறுமி கழிவறைக்கு சென்றபோது, அங்கு தூய்மைப் பணியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய் (23) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சிறுமி உடனே ஆசிரியையிடம் இந்த விவரத்தை தெரிவித்தார். ஆனால், பள்ளி நிர்வாகம் இதை உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்காமல், “நாளை விசாரிப்போம்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை வீடு திரும்பிய சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறியதும், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளியை நேற்றிரவு முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெய்யை கைது செய்து, பாக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இன்று (ஜூலை 31) காலை, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் கேள்விகள் எழுப்பியபோது, திருப்திகரமான பதில் கிடைக்காததால் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பெற்றோர்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் இணைந்து, “குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்” எனக் கோஷமிட்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் அமர்ந்திருந்த பெற்றோர்களிடம் போலீசாரும், கல்வி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், பொதுமக்கள் சிரமம் அடைவதை கருத்தில் கொண்டு, போலீசார் நடவடிக்கையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தொடங்கினர். போலீசார் சுமார் 30-க்கும் மேற்பட்ட பெற்றோர்களை கைது செய்து வேன்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் கூட்டம் சிதறியது. சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.