தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த துயர சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கரூர் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க: கரூர் துயர சம்பவம்: வன்முறையைத் தூண்டியதாக தவெக-வின் ஆதவ் அர்ஜுனாவுக்கு கடும் எதிர்ப்பு!
பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


