தமிழ்நாடு

"ஆறுதல் கூறவே வந்தேன்.." மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

top-news

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் கலந்துகொண்ட பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், ஆதரவு அளிக்கவும் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் தான் இங்கு வந்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.


இன்று (செப்டம்பர் 29) கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "கரூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்த நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதுதான் மிக முக்கியம். அதற்காகத்தான் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் நானும், மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் இங்கு வந்தோம்" என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "இங்கு நடந்தது குறித்து எந்தவிதமான அரசியல் விமர்சனமும் செய்யவோ அல்லது அரசின் விசாரணை குறித்துப் பேசவோ நான் வரவில்லை. உயிரிழந்த குடும்பங்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர்களின் கோரிக்கைகளையும், கவலைகளையும் பிரதமரிடம் எடுத்துச் செல்வேன். இந்தச் சோகமான நேரத்தில் மத்திய அரசு துணையாக இருக்கும்" என்று உறுதி அளித்தார்.

முன்னதாக, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் நெரிசல் ஏற்பட்ட இடத்தையும், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்வையிட்டனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.