தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனதைக் கலங்கடித்த துயரம்:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட காணொலிச் செய்தியில், "கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மனதை மிகவும் கலங்கடித்துவிட்டது. மருத்துவமனையில் நான் நேரில் பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை. இதுபோன்ற ஒரு துயரம் இதுவரை நடக்காதது; இனியும் நடக்கக்கூடாது," என்று வேதனை தெரிவித்தார்.
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 29, 2025
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.#KarurTragedy pic.twitter.com/Ihum9qIWNY
அரசியலை ஒதுக்கி வையுங்கள்:
உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தமிழ் உறவுகளே என்று அவர் வலியுறுத்தினார்.
"எந்தக் கட்சித் தலைவரும் தனது தொண்டர் உயிரிழப்பதை விரும்ப மாட்டார். இந்த நேரத்தில், அரசியல் நிலைப்பாடு, தனி மனிதப் பகை என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இந்தத் துயரம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம்" என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
விசாரணை ஆணையத்தின் அறிக்கை முக்கியம்:
இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னரே, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றும், அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவது குறித்து புதிய நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, கரூர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


