தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று எங்கெல்லாம் மழை வெளுக்கும்..? வானிலை மையம் அப்டேட்!

top-news

வங்கக் கடலின் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (செப்டம்பர் 27, சனிக்கிழமை) காலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மழை வெளுக்கப்போகும் பகுதிகள்:

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்தாலும், அதன் தாக்கத்தால் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்று திசை மாறுதல் காரணமாக பின்வரும் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது:



கனமழை எச்சரிக்கை: இன்று கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலியின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்:

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக் கடலில் நிலவும் இந்த வானிலை மாற்றத்தால், கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வானிலை எச்சரிக்கைகளைக் கவனித்து, பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.