தமிழ்நாடு

உசிலம்பட்டியில் எடப்பாடி பிரசார கூட்டம்: லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு 2 பேர் படுகாயம்

top-news

உசிலம்பட்டி, செப். 5: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக பிரசாரம் செய்து வருகிறார். நேற்று மாலை வாடிப்பட்டியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அதன் பின்னர் உசிலம்பட்டியில் பிரசாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தார். இதற்காக திருமங்கலம் விலக்கு பகுதியில் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

இந்நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் திடீரென அதிவேகத்தில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓரத்தில் சென்ற டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (39) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும், யோகா பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்ததாக தெரியவந்துள்ளது. ராமச்சந்திரனுக்கு மனைவியும், இரு சிறிய குழந்தைகளும் உள்ளனர் என்பதும் தெரிகிறது.

லாரி தொடர்ந்து போலீஸ் வாகனமும், செய்தியாளர்கள் பயணித்திருந்த வாகனமும் மோதி நின்றது. இதனால் அந்த வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன. ஆரம்ப விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர். விபத்துக்குப் பிறகு அவர் வாகனத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உசிலம்பட்டி தாலுகா போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனுடன், அதே பகுதியில் எடப்பாடி பழனிசாமியைப் பார்க்க வந்த கூட்ட நெரிசலின்போது, இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சந்திரம்மாள், ஆதிமூர்த்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பெரிய அளவில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்த போதிலும், திடீர் விபத்து நிகழ்ந்ததால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. விபத்து நடந்தது குறித்து பொதுமக்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.