தமிழ்நாடு

தமிழக ஹோட்டல்களில் பெப்சி, கோக் புறக்கணிப்பு- உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

top-news

சென்னை: அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு விதித்திருக்கும் அதிக வரியை எதிர்த்து, தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “அமெரிக்கா, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளது. இது உலக நாடுகளுக்கு விதிக்கும் மிக அதிகபட்ச வரி. இதன் விளைவாக, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஜவுளி, ஆயத்த ஆடைகள், இறால், தோல் பொருட்கள், நவரத்தினங்கள், ஆபரணங்கள், ரசாயனங்கள், மின்சார இயந்திரங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அமெரிக்காவைச் சேர்ந்த உணவு மற்றும் பானப் பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இதன் கீழ் பெப்சி, கோக், கே.எஃப்.சி போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு, பானங்கள் மற்றும் மினரல் வாட்டர்கள் அனைத்தும் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படாது. அதற்கு பதிலாக, இந்தியாவில் தயாராகும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்து, அமெரிக்க பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட உள்ளது.”

மேலும் அவர் தொடர்ந்தும் கூறியதாவது: “உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விகி, சொமோட்டா போன்றவை அதிகளவில் கமிஷன் வசூலித்து, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துகின்றன. இதனால், மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனவே, இந்நிறுவனங்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு மாற்றாக, தமிழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உருவாக்கியுள்ள ‘சாரோ’ என்ற புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும். ஸ்விகி, சொமோட்டாவில் பணியாற்றும் டெலிவரி பாய்களுக்கு ‘சாரோ’வில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.”

இந்த அறிவிப்பின் மூலம், அமெரிக்காவின் வரி கொள்கைக்கு எதிராக இந்திய தொழில்துறை மற்றும் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழக ஹோட்டல் துறை ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.