தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இன்று (செப்டம்பர் 3) மதியம் திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவரை வரவேற்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதா ஜீவன் உள்ளிட்டோர் பொன்னாடை மற்றும் மலர்கொத்துகள் வழங்கினர்.
விமான நிலையத்தில் குறுகிய நேரம் தங்கியிருந்த குடியரசுத் தலைவர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்று, பட்டம் பெறும் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு உரையாற்ற உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவாரூரிலிருந்து திருச்சிக்கு திரும்பும் அவர், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரையில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்குவார். அங்கிருந்து நேரடியாக ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதஸ்வாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்.
பின்னர் கார் மூலம் திருச்சி விமான நிலையம் திரும்பும் குடியரசுத் தலைவர், இரவு 7 மணியளவில் தனிவிமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.
திருச்சி, திருவாரூர், ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


