தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென சரிந்துள்ளது. இன்று காலை சுமார் 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, பிற்பகலில் 6,500 கனஅடியாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 12,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, பின்னர் 10,000 கனஅடியாக குறைந்த நிலையில் தற்போது மேலும் சரிந்துள்ளது.
நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் நீரின் வேகம் சற்று குறைந்துள்ளது.
இதனிடையே, நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பரிசல் இயக்கத்திற்கான தடை 11-வது நாளாக நீடித்து வருகிறது.
காவிரி நீர்வரத்து தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நீர்வரத்து நிலவரத்தை ஆய்வு செய்த பின்னர், ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் சவாரிக்கு அனுமதி வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



