தமிழ்நாடு

தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் 20% முன்னுரிமை: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

top-news

தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்படும் அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை வழங்கும் நடைமுறை மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்படுவோருக்கு மட்டுமே

தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தன.

இதனிடையே, ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்ற அடிப்படையில் இந்த முன்னுரிமையை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, சட்டத்தின் நிலையை தெளிவுபடுத்தும் வகையில் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

தற்போது ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இந்த திருத்தச் சட்டம் புதிதாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் தகுதியுடையவர்கள்?

முன்னுரிமையைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், 1-ம் வகுப்பு முதல் சம்பந்தப்பட்ட அரசுப் பணிக்கான கல்வித் தகுதி வரை முழுமையாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருக்க வேண்டும்.

வேறு மொழியை பயிற்றுமொழியாகக் கொண்டு படித்துவிட்டு, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இந்த முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள் அல்லர். மேலும், தாங்கள் பயின்ற அனைத்து கல்வி நிறுவனங்களிலிருந்தும் தமிழ் வழிக் கல்விக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.