தமிழ்நாடு

ஆசிரியர் TET விவகாரம்: “தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது” - அன்பில் மகேஸ்

top-news

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அணுகுமுறை குறித்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு விலக்கு தொடர்பாக தவெக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளே சென்னை உயர் நீதிமன்றத்தில் TET தேர்வுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை குறைக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டதாக அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

“ஒருபுறம் நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாட்டையும், மறுபுறம் சட்டப்பேரவையில் வேறு நிலைப்பாட்டையும் அரசு எடுத்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த திமுக ஆட்சியில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்பட்டதாகவும், தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கப்பட்டதாகவும் அன்பில் மகேஸ் குறிப்பிட்டுள்ளார்.

2026 மே 29-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளிக்க மறுத்த பின்னர், தொடர்ந்து சட்டப்போராட்டத்தை மேற்கொள்ள தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET-ல் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானம் 2026 ஆகஸ்ட் 25 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் நீண்டகால பணி அனுபவத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.