தமிழ்நாடு

அரிசி, பருப்பு, சர்க்கரை விலை உயர்வு: மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க சிபிஐ வலியுறுத்தல்!

top-news

சென்னை: அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சர்க்கரை விலை கடந்த மாதம் கிலோ ரூ.48 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.70 வரை உயர்ந்துள்ளதாக சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது. எத்தனால் உற்பத்திக்காக கரும்பு அதிக அளவில் திருப்பி விடப்படுவதும் சர்க்கரை உற்பத்தி குறைவதற்கு காரணமாக இருப்பதாக கட்சி தெரிவித்துள்ளது.

அதேபோல், கர்நாடகாவில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு மற்றும் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதன் காரணமாக அரிசி விலையும் அதிகரித்துள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது. பொன்னி அரிசி கிலோ ரூ.80 வரையும், இட்லி அரிசி ரூ.35 வரையும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாக கட்சி கூறியுள்ளது.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்றும் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை சிபிஐ வலியுறுத்தியுள்ளது.