தமிழ்நாடு

பழனி முருகன் கோவிலில் ரூ.3.98 கோடி உண்டியல் காணிக்கை!

top-news

பழனி: பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் மொத்தம் ரூ.3 கோடியே 98 லட்சத்து 27 ஆயிரத்து 230 கிடைத்துள்ளது. மேலும் தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளன.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் உண்டியல்களில் பணம், நகைகள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

தங்கம், வெள்ளியும் காணிக்கை

பழனி முருகன் கோவில் உண்டியலில் ரூ.3 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரத்து 714 ரொக்கம் கிடைத்தது. இதனுடன் 635 கிராம் தங்கம், 9,155 கிராம் வெள்ளி மற்றும் 918 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்தன.

மேலும், திருஆவினன்குடி கோவில் உண்டியலில் ரூ.37 லட்சத்து 66 ஆயிரத்து 801 ரொக்கம், 24.320 கிலோ தங்கம், 478.300 கிராம் வெள்ளி கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.29 ஆயிரத்து 715 காணிக்கை கிடைத்தது.

இதன் மூலம் 3 கோவில்களின் உண்டியல் காணிக்கையாக மொத்தம் ரூ.3 கோடியே 98 லட்சத்து 27 ஆயிரத்து 230 கிடைத்துள்ளது.