தமிழகத்திற்கு காவிரியில் இதுவரை சுமார் 40 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டிய நிலையில், தற்போது 4 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளதாக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வினோஜ் பி. செல்வம் அவருடைய எக்ஸ் பக்கத்தில், தமிழகத்திற்கு சாதகமான தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் எடுத்த நிலைப்பாட்டை தொடர்ந்து, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டியதாக குறிப்பிட்டார். ஆனால், அதே கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட கூட்டாமல், தமிழக விவசாயிகளை அரசு கைவிட்டுவிட்டதாகவும் வினோஜ் பி. செல்வம் விமர்சித்துள்ளார்.
காவிரி நீரை தமிழகத்திற்கு உரிய அளவில் பெற்றுத்தருவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
இதனிடையே, தமிழகத்தில் பருவமழை நன்றாக பெய்து நீர்வளம் பெருகவும், அணைகள் நிரம்பி விவசாயம் செழிக்கவும் வேண்டி, பாஜக விவசாய அணி சார்பில் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் வினோஜ் பி. செல்வம் மற்றும் பாஜக விவசாய அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு, அம்மனுக்கு தேர் வடம் பிடித்து வழிபட்டனர். தமிழகத்தில் பருவமழை பொய்க்காமல் பெய்து, நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி, விவசாயம் செழிக்க வேண்டும் என அவர்கள் வேண்டிக்கொண்டனர்.
இது தொடர்பாக அவருடைய எக்ஸ் பக்கத்தில், “ஜோசப் விஜய் கைவிட்டாலும், மாரி மழை பெய்து காமாட்சி அம்மன் தமிழகத்தை காத்து நிற்க வேண்டும்” எனவும் பதிவிட்டுள்ளார்.



