கோதாவரி - காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தென் தமிழகத்தின் நீர்வளத் தேவையை நீண்டகால அடிப்படையில் பூர்த்தி செய்யும் முக்கிய திட்டமாக இதை கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடிதத்தில், பருவமழை காலங்களில் கடலில் கலக்கும் உபரி நீரை தமிழகத்தின் வறட்சி பகுதிகளுக்கு மாற்றி பயன்படுத்துவது காலத்தின் தேவையாக இருப்பதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்ய இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தேவையான மத்திய அரசின் அனுமதிகள், நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், மாநில அரசுடன் ஒருங்கிணைந்து பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீர்வள மேலாண்மை, விவசாய உற்பத்தி உயர்வு மற்றும் நீடித்த பாசன வசதியை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்தக் கடிதம் மாநிலத்தின் நீர்வள அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.



