புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மற்றும் வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஒருவர் விசாரணையில் இருந்து விலகியுள்ளார்.
நீதிபதி விலகல்: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நடைபெற்ற மோசடி தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரிய மனுக்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி மற்றும் நீதிபதி வி.மோகனா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி வி.மோகனா அறிவித்தார்.
வேறு அமர்வுக்கு உத்தரவு: இதைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி வி.மோகனா இடம்பெறாத புதிய அமர்வில் இந்த மனுக்களைப் பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அரசு தரப்பு வாதம்: விசாரணை அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் வழக்கறிஞரை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பு புகார்: மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் 2,000-க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளாகவும், 700-க்கும் மேற்பட்ட சாட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும்" என்று வாதிட்டார்.
நீதிபதி விலகியதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வு அமைக்கப்பட்டு வழக்கு விசாரணை விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



