தமிழ்நாடு

“நல்லகண்ணு அய்யா விரைந்து நலம் பெற வேண்டும்” – ஸ்டாலின் நேரில் ஆறுதல்

top-news

**சென்னை:** இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர், தகைசாலான தமிழர் நல்லகண்ணு தற்போது உடல்நலக் குறைவால் சென்னை **ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்** சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

நல்லகண்ணு (வயது 98), கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அவரது வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை **சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு** கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாலை உணவருந்திக் கொண்டிருந்தபோது, உணவுக்குழாயில் புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அதே நாள் இரவு 10.30 மணியளவில் **சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு** மாற்றி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, **நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்** உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, நல்லகண்ணுவுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளித்து வருகின்றனர். வயது மூப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பிற உடல்நலச் சிக்கல்களுக்கும் தேவையான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, நல்லகண்ணுவின் உடல்நிலையை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பாகவே, நேற்று தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டிருந்த முதல்வர், *“உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா உடல்நலம் குறித்து தோழர் முத்தரசன் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா விரைந்து நலம் பெற வேண்டும் என மனமாரப் பிரார்த்திக்கிறேன்”* எனக் குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் இயக்கங்களின் முன்னோடியாகவும், தமிழ்ச் சமூகநீதிக்கான குரலாகவும், பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து வந்தவர் நல்லகண்ணு. அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என அரசியல் தலைவர்கள், கட்சியினர், மக்கள் என பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.