தமிழ்நாடு

“மேகேதாட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும்”... முதல் அமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

top-news

மேகேதாட்டு அணை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு, தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர் தமிழ்நாட்டு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு அத்தியாவசியமானது என்றும், மேகேதாட்டு அணை திட்டம் தமிழகத்தின் நீர் உரிமையை பாதிக்கக்கூடிய முக்கிய பிரச்சினை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடைமுறைகளும் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட்டு, இரு மாநிலங்களின் உரிமைகளையும் சட்டப்படி உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மக்களின் உணர்வுகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை முயற்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் முதல் அமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

மேகேதாட்டு அணை விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது தமிழக அரசியல் வட்டாரங்களின் கவனம் திரும்பியுள்ளது.