தமிழ்நாடு

காலை உணவுத் திட்டம் எதிர்காலத்துக்கு சூப்பர் முதலீடு – முதல்வர் ஸ்டாலின்

top-news

**சென்னை:** “காலை உணவுத் திட்டம் என்பது செலவு அல்ல; தமிழ்ச் சமூகத்திற்கு பல மடங்கு லாபத்தை தரும் சூப்பர் சமூக முதலீடு” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில், அரசு உதவிபெறும் நகர்ப்புற தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி அவர் பேசியதாவது:
“இனி மாநிலம் முழுவதும் உள்ள 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 20.59 லட்சம் மாணவர்கள் தினமும் சூடான, சுவையான, சத்தான காலை உணவை சாப்பிட்டு வகுப்பறைகளில் உற்சாகமாக நுழைய இருக்கிறார்கள். இது ஒரு சோஷியல் இன்வெஸ்ட்மென்ட். எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு நினைத்ததற்கும் மேலான பலன் கிடைக்கும்.


இந்தத் திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து மாணவர்களின் உடல்நலம், வருகைச் சதவீதம், கற்றல் திறன், நண்ப்தன்மை உணர்வு ஆகியவை மேம்பட்டுள்ளன. குடும்பங்களின் பணிச்சுமை குறைந்துள்ளது. ஆரோக்கிய குறைபாடுகள், மருத்துவச் செலவுகள் குறைந்துள்ளன. பசி இல்லாமல் புன்னகையுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளைப் பார்க்கும் நாள் வந்துள்ளது.

ஒரு வருடத்திற்கு 600 கோடி ரூபாய் செலவாகினாலும், இது முதலீடே தவிரச் செலவு அல்ல. மாணவர்களின் அறிவு, ஆற்றல், திறமைகள் மீது நம்பிக்கை வைத்து அரசு இந்த முதலீட்டை செய்கிறது. குழந்தைகள் நன்றாக சாப்பிட்டு, நன்றாகப் படித்து, நன்றாக முன்னேறுவதே இந்தத் திட்டத்தின் உண்மையான வெற்றி” என ஸ்டாலின் கூறினார்.

மேலும், “மாணவர்கள் மட்டுமல்லாது, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்காக ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டமும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்காக வந்திருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.