தமிழக மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அரசு சேவைகள் குறித்த பணிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் விஜய், குடிநீர், சாலை, சுகாதாரம், கல்வி, மின்சாரம், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்கு எந்தவித தடையும் இன்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசுத் திட்டங்கள் அறிவிப்பாக மட்டுமின்றி, அவற்றின் பயன் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்றும், மக்கள் குறைகளை விரைந்து தீர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்துவதோடு, மக்களுடன் நெருக்கமாக செயல்படும் நிர்வாகத்தை உருவாக்க அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அரசுத் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, மக்கள் நலத் திட்டங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் மாநில நிர்வாகத்தின் செயல்திறன், வளர்ச்சித் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு, முதலீட்டு சூழல் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு நடைபெற்றது.



