தமிழ்நாடு

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு: 6 போலீசாருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி குற்றப்பத்திரிகை தாக்கல்

top-news

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறை விசாரணையின் போது இளைஞர் ஆகாஷ் மரணமடைந்த வழக்கில், தொடர்புடைய 6 போலீசாருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி (CB-CID) போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கின் பின்னணி: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆகாஷ் டெலிசன் (24). கடந்த மார்ச் மாதம் 5-ஆம் தேதி, கொலை முயற்சி வழக்கு ஒன்றின் தொடர்பாக இவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றதில் ஆகாஷ் தவறி விழுந்து கால் முறிந்ததாகக் கூறி, அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மார்ச் 8-ஆம் தேதி ஆகாஷ் உயிரிழந்தார்.

ஆகாஷை போலீசார் சட்டவிரோதமாக காவலில் வைத்து கடுமையாக தாக்கியதாலேயே அவர் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை: குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆகாஷின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து 100 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு சார்பில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைத்து நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மரணத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் திலீபன், சப்-இன்ஸ்பெக்டர் குகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் (Head Constables) பழனி மற்றும் தெய்வேந்திரன், முதல் நிலை காவலர்கள் காளீஸ்வரன் மற்றும் மகேந்திரன் ஆகிய 6 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீவிர விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், தற்போது இந்த 6 போலீசாருக்கும் எதிராக சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது வழக்கின் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.