பல்லாவரம்: சென்னையை வாட்டி வதைக்கும் கத்திரி வெயிலுக்கு மத்தியில், பல்லாவரம் பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் கடந்த 48 நாட்களாக பொதுமக்களுக்குத் தொடர்ந்து குளிர்பானம் வழங்கி தாகம் தீர்த்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
வாட்டிய வெயிலும் சிறுவனின் சேவையும்: நடப்பு ஆண்டில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் வெப்பத்தாலும், நீர்ச்சத்து குறைபாட்டாலும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
பொதுமக்களின் இந்த துயரைக் கண்டு நெகிழ்ந்த பல்லாவரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், கோடைக்காலம் தொடங்கியது முதலே மக்களுக்கு உதவ முன்வந்தான். கடந்த 48 நாட்களாகத் தொய்வில்லாமல் தினமும் ஒரு குளிர்பானம் என்ற வீதத்தில் மோர், ரோஸ்மில்க், பாதாம் மில்க், சர்பத் போன்றவற்றைத் தன் கைகளாலேயே பொதுமக்களுக்கு வழங்கி தாகம் தணித்து வருகிறான்.
தினமும் 500 பேருக்கு மேல் உதவி: பல்லாவரத்தில் உள்ள இயல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.எஸ்.செந்திலின் மகன் சம்ருத் செந்தில் தான் இந்த சாதனைச் சிறுவன். அங்குள்ள பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் சம்ருத், தினமும் மருத்துவமனை வளாகத்தின் முன்பு நின்றுகொண்டு, அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோருக்கு தினமும் குளிர்பானங்களை வழங்கி அசத்தி வருகிறான்.
தந்தையடி ஒற்றிய மைந்தன்: சிறுவயது முதலே சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்ட சம்ருத் செந்தில், மக்கள் சேவையில் எப்போதும் முன்னிற்கும் தனது தந்தை டாக்டர் செந்திலை முன்மாதிரியாகக் கொண்டு இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளார். தந்தையுடன் இணைந்து பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் இந்த சிறுவனின் உன்னதமான செயலை, அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி, வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.


