சென்னை நகரில் திடீரென உயிரிழந்த குதிரைக்கு ‘கிளாண்டர்ஸ்’என்ற ஆபத்தான தொற்று நோய் இருந்தது ஆய்வக பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கால்நடை மருத்துவத்துறையிலும் பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அந்த குதிரை திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதன் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. தற்போது வெளியான லேப் ரிப்போர்ட்டில், மிகவும் ஆபத்தான பாக்டீரியா தொற்றான கிளாண்டர்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாண்டர்ஸ் என்பது குதிரைகள், கழுதைகள் போன்ற விலங்குகளில் பரவும் தீவிர தொற்று நோயாகும். சில நேரங்களில் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அருகிலிருந்த பிற குதிரைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து கால்நடை பராமரிப்பு மையங்கள் மற்றும் குதிரைப்பந்தய வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.


