தமிழ்நாடு

இன்று 386-வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை.. முதல்வர் நெகிழ்ச்சி பதிவு !

top-news

**சென்னை, ஆகஸ்ட் 22** – இன்று “சென்னை தினம்” (Madras Day) மாநிலம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை மாநகரம் தோன்றிய தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி “சென்னை தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையின் சிறப்பையும், தனித்துவத்தையும் போற்றும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது *எக்ஸ்* சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,

“எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து,
வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து,
பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து,
எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,
சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,
மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!
வணக்கம் வாழவைக்கும் சென்னை!” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரம் உருவாகி இன்று 386 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் *#ChennaiDay* என்ற ஹாஷ்டேக்கில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொழில், கல்வி, மருத்துவம், கலாச்சாரம், விளையாட்டு எனப் பல துறைகளில் முன்னேற்றத்திற்கும், கனவுகளை நனவாக்கும் தளமாகவும் விளங்கும் சென்னையை “தமிழ்நாட்டின் இதயத் துடிப்பு” என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருப்பது, நகரின் பெருமையை மேலும் வலியுறுத்துவதாகும்.