சென்னை: தமிழகத்தின் கிராமப்புறக் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், முக்கிய குடிநீர்த் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறவும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.
நிலுவைத் தொகை விடுவிப்பு: ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஒன்றிய அரசின் நிலுவைத் தொகையைத் தாமதமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஒகேனக்கல் இரண்டாம் கட்டத் திட்டம்: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டகாலத் தேவையான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் (கட்டம்-2) செயல்பாட்டிற்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் அளிப்பதோடு, தேவையான நிதியுதவியையும் வழங்க வேண்டும்.
இக்கடிதத்தில் தமிழகத்தின் குடிநீர் கட்டமைப்பு குறித்து முதல்வர் குறிப்பிட்டுள்ளதாவது:
முன்னோடி மாநிலம்: பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
இலக்கை எட்டும் வேகம்: தமிழக கிராமப்புறங்களில் உள்ள மொத்தமுள்ள 1.25 கோடி வீடுகளில், இதுவரை 1.12 கோடி வீடுகளுக்கு (சுமார் 90%) குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
திட்ட விரிவாக்கம்: ஜல் ஜீவன் இயக்கத்தை மேலும் விரிவாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சமமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்திட, நிதி நெருக்கடியின்றி திட்டங்களைச் செயல்படுத்த ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு அவசியம் என முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


