சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், 2024-25-ம் நிதியாண்டிற்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் பொங்கல் பரிசை அறிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சுமார் 9.90 லட்சம் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயனடைவர். இதற்காக ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள்: 'சி' மற்றும் 'டி' (Group C & D) பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3,000 போனஸ் வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்கள்: 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும்.
தொகுப்பூதியப் பணியாளர்கள்: தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் நிதியாண்டில் 240 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு 'ஹேப்பி நியூஸ்'
புத்தாண்டு பிறந்த இரண்டாம் நாளான இன்று, ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அறிவிப்பு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இந்தப் பொங்கல் பரிசுத் தொகை, பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு
அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கான (ரேஷன் அட்டைதாரர்கள்) பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம் தொடங்குகிறது.
ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் கூடிய பரிசுத் தொகுப்பு ஜனவரி முதல் வாரத்தில் விநியோகிக்கப்பட உள்ளது.
பொதுமக்களுக்கான ரொக்கப் பணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


