தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு ‘தித்திக்கும்’ செய்தி! பொங்கல் போனஸ் அறிவித்தார் முதல்வர் - 10 லட்சம் பேர் பயன்!

top-news

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2026-ம் ஆண்டு பொங்கல் போனஸ் வழங்குவதற்காக ரூ. 183.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் சுமார் 9.90 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.


யாருக்கு எவ்வளவு போனஸ்?

அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பணியாளர்களின் வகைப்பாட்டிற்கு ஏற்பப் பின்வரும் தொகைகள் வழங்கப்பட உள்ளன:

'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்கள்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 'சி' மற்றும் 'டி' (C & D Group) பிரிவைச் சார்ந்தவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 3,000 வரை மிகை ஊதியம் (Bonus) வழங்கப்படும்.

தொகுப்பூதியப் பணியாளர்கள்: தொகுப்பூதியம் மற்றும் சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், நிதியாண்டில் 240 நாட்கள் பணியாற்றிய சில்லறைச் செலவினப் பணியாளர்களுக்கு ரூ. 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியதாரர்கள்: 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 1,000 வழங்கப்படும்.

நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சி
கடந்த சில நாட்களாக அரசு ஊழியர் சங்கங்கள் போனஸ் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், புத்தாண்டு தினமான இன்று இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது அரசு ஊழியர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயனாளிகளின் எண்ணிக்கை

இந்த அறிவிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். இதற்கான நிதி உடனடியாக விடுவிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.