தமிழ்நாடு

கீழடி ஆய்வுகளை ஏற்பதில் தயக்கம் காட்டுவது ஏன் ? நாடாளுமன்றத்தில் கனிமொழி கேள்வி !

top-news



புதுடெல்லி:
தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றுப் பெருமையை உலகறியச் செய்த முக்கிய அகழ்வாராய்ச்சி தளமான **கீழடி** குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வியாக எழுந்துள்ளது.

மக்களவையில் இன்று, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான **கனிமொழி கருணாநிதி எம்.பி.**, கீழடி தொல்பொருள் அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதா? ஏன் இதுவரை அதை பொதுமக்களுக்கு வெளியிடவில்லை? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்து, **2023 ஜனவரியில்** தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை, இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு (ASI) ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை மத்திய அரசு பெற்றுள்ளதா? பெற்றிருந்தால் ஏற்றுக்கொண்டதா? ஏற்றுக்கொண்டிருந்தால், அதன் முக்கிய அம்சங்கள் என்ன? இல்லையென்றால், ஏன் இன்னும் அது ஏற்கப்படவில்லை? என அவர் கேட்டார்.

மேலும், இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அல்லது ASI ஆல் அதிகாரப்பூர்வமான **ஆட்சேபனைகள்** ஏதும் முன்வைக்கப்பட்டுள்ளதா? அப்படியானால், அவை என்ன? அறிக்கையை மதிப்பாய்வு செய்ய தற்போது எந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது? எனவும் அவர் விளக்கம் கோரினார்.

கீழடி குறித்த **இறுதி அறிக்கை** எப்போது வெளியிடப்படும்? அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? என்றும் கனிமொழி கேட்டுள்ளார்.

அத்துடன், கிமு 580-க்கு முந்தைய மிக உயர்ந்த நாகரிகத்தை சுட்டிக்காட்டும் பல முக்கிய அகழ்வாராய்ச்சி தளங்களின் கண்டுபிடிப்புகள் இருப்பினும், கீழடியை **தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக** மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதா? அங்கீகரித்திருந்தால் அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், காரணம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பை நிரூபிக்கும் கீழடி கண்டுபிடிப்புகள் குறித்து **மத்திய அரசு தாமதிக்கிறது** என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக எழுந்து வருகின்ற நிலையில், இந்த கேள்விகள் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.