தமிழ்நாடு

ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேர் கைது: நிரந்தரத் தீர்வு காண ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!

top-news

சென்னை: இன்று (23.12.2025) ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதையடுத்து, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


இக்கடிதத்தில், இராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து 22.12.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் மறுநாள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கைதுகள் மற்றும் படகு பறிமுதல் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இது மீனவ சமூகங்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நீண்டகால பிரச்சினைக்கு இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு / மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையினை விரைவில் கூட்ட மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், தற்போது 248 மீன்பிடிப் படகுகளும், 62 மீனவர்களும் (2024 இல் கைது செய்யப்பட்ட 18 பேர் உட்பட) இலங்கைக் காவலில் உள்ளனர். எனவே, இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.