தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் – 10 வது நாளாக தொடர்கிறது

top-news



சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் நேற்று 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததை எதிர்த்து, பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்பதையும், ஏற்கெனவே NULM திட்டம் மூலம் வழங்கப்பட்ட பணியை தொடர வேண்டும் என்பதையும் கோரி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஆறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் தீர்வு கிடைக்கவில்லை. நேற்று ஏழாவது கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில், மேயர் ஆர். பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் உழைப்போர் உரிமை இயக்கம் மற்றும் தூய்மை பணியாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின், உழைப்போர் உரிமை இயக்க செயலாளர் சுரேஷ், “எங்களது கோரிக்கைகள் குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களை பணியில் இருந்து நீக்குவது பற்றியே பேசினர். மேலும், திமுக கவுன்சிலர்கள் பணம் காட்டி இந்த போராட்டத்தை கலைக்க முயற்சி செய்கின்றனர்” என்றார்.

உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி, “எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். போராட்டக்காரர்கள் பணிக்கு திரும்பியதாக வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை” என்று தெரிவித்தார்.

போராட்டத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், “நாடு முழுவதும் தனியார் மயமாக்கல் வேகமாக நடக்கிறது. தமிழகத்திலும் பல துறைகள் தனியாரிடம் செல்கின்றன. ஆனால் ஏற்கெனவே கிடைத்த உரிமைகளை பறிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நியாயமான முறையில் தீர்வு காண முயற்சி செய்வோம்” என்றார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “நகரத்தை சுத்தம் செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? மாநகராட்சி இருப்பதற்கே காரணமே அது. தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த நிதி இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் தேவையில்லாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். 2021-ல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பின்னர், பாமக பொருளாளர் திலகபாமா, போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, “தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு சமூகநீதியுடன் பரிசீலிக்க வேண்டும்” என்றார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “பேச்சுவார்த்தை என்ற பெயரில் மிரட்டி, அறப்போராட்டத்தை கலைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

இதனால், தூய்மை பணியாளர்களின் போராட்டம் அரசின் முடிவு வரும் வரை தீவிரமாக தொடரும் நிலை உள்ளது.