சென்னை: மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக துணை நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், கமல்ஹாசன் ‘சனாதன தர்மம்’ குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். இதற்கு எதிராக துணை நடிகர் ரவிச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், கமல்ஹாசனுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மநீம கட்சியின் துணைத் தலைவர் மவுரியா தலைமையில் கட்சியினர்கள், நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்று, ரவிச்சந்திரன் மீது அதிகாரப்பூர்வ புகார் மனுவை அளித்தனர்.
மனுவை பெற்ற காவல்துறை அதிகாரிகள், சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும், ரசிகர் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


