தமிழ்நாடு

இன்று பொள்ளாச்சி, உடுமலையில் அரசு விழாக்களில் பங்கேற்கிறார் மு.க. ஸ்டாலின்

top-news



திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறும் அரசு விழாக்களில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 11) பங்கேற்கிறார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், உடுமலை நேதாஜி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில், முதலவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.949 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார். மேலும், ரூ.182 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார். அதோடு, ரூ.295 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு வழங்குவார். விழாவில் சிறப்புரையும் நிகழ்த்த உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, உடுமலை நேரு வீதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதலவர் திறந்து வைக்கிறார்.

பின்னர், முதலவர் மு.க. ஸ்டாலின் பொள்ளாச்சிக்கு செல்வார். அங்கு பிஏபி பாசனத் திட்டம் அமைய காரணமான முன்னாள் முதல்வர் காமராஜர், சி. சுப்பிரமணியம், வி.கே. பழனிசாமி கவுண்டர், பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரின் முழு உருவச் சிலைகளை திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, முதலவர் நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து விமானத்தில் கோயம்புத்தூர் வந்தார். அங்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், காரில் உடுமலை சென்ற முதலவர், அங்கு இரவு தங்கினார்.