விளையாட்டு

ஓவல் டெஸ்ட்: இந்தியா 6 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் சேர்ப்பு

top-news

லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டது. லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணியில் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு துருவ் ஜூரெல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். களநடுவர் முதலில் அவுட் கொடுக்காத நிலையில் இங்கிலாந்து அணி மேல்முறையீடு செய்தது. பின்னர் பந்து ஸ்டம்பை தாக்குவதாக தெரிந்ததால் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன், கே.எல். ராகுலுடன் இணைந்து பொறுமையாக விளையாடினார். கே.எல். ராகுல் 40 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் போல்டானார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே கூடுதல் பவுன்ஸ் பெற்ற பந்தை கட் செய்ய முயன்ற ராகுலின் பேட் உள்விளிம்பை பந்து தாக்கி நேராக ஸ்டம்பை பதம் பார்த்தது.

38 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்த நிலையில் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினார். இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்களுக்கு 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் மதிய உணவு இடைவேளை வழங்கப்பட்டது. மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சுமார் 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது ஷுப்மன் கில் 15 ரன்களும், சாய் சுதர்சன் 25 ரன்களும் எடுத்திருந்தனர். மீண்டும் ஆட்டம் தொடங்கிய சில நேரத்தில் கஸ் அட்கின்சன் பந்தில் தடுப்பாட்டம் செய்த ஷுப்மன் கில் ரன் ஓட முயன்றபோது சாய் சுதர்சன் ஓட வேண்டாம் என பின் வாங்கினார். இதனால் ஷுப்மன் கில் திரும்பி கிரீசுக்குள் செல்வதற்குள் அட்கின்சன் பந்தை எடுத்து ஸ்டம்பை தகர்த்து ரன் அவுட்டில் வீழ்த்தினார். இந்த ரன் அவுட்டை ஓய்வறையில் இருந்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விரக்தியுடன் பார்த்தார்.

இதையடுத்து கருண் நாயர் களமிறங்கினார். 29 ஓவர்களில் 3 விக்கெட்களுக்கு 85 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, மழை காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டது. அப்போது சாய் சுதர்சன் 84 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களும், கருண் நாயர் 8 பந்துகளை சந்தித்து ரனில்லாமலும் களத்தில் இருந்தனர்.

பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது சாய் சுதர்சன் 108 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஜாஷ் டங் பந்தில் அவுட் ஆனார். தொடர்ந்து ஜடேஜாவையும் டங் 9 ரன்களில் வெளியேற்றினார். இந்த தொடரில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பு கிடைத்த துருவ் ஜூரெல் 19 ரன்கள் எடுத்து அட்கின்சன் பந்தில் அவுட் ஆனார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 64 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 52 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் ஷுப்மன் கில் 21 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அவர் புதிய சாதனையை பதிவு செய்தார். 11 ரன்களை எட்டியவுடன் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் 1978-79-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது ஷுப்மன் கில் 743 ரன்களை குவித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும், இந்த டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் டாஸில் ஐந்தாவது முறையாக தோல்வியடைந்துள்ளார். இதன் மூலம் ஒரு அணியினர் 5 ஆட்டங்களிலும் டாஸை இழப்பது 14-வது முறை ஆகும். இதில் 13 தொடர்களில் 3 தொடர்கள் டிராவில் முடிந்தன. 1953-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து டாஸில் அனைத்தையும் இழந்தபோதும் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.