விளையாட்டு

தொடங்கியது ஓவல் டெஸ்ட்: தொடரை சமன் செய்யுமா இந்தியா ?

top-news



லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்தியா 1-2 என்ற கணக்கில் பின் தங்கி வருகிறது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் தொடரை 2-2 என சமன் செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.

மாந்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக போராடி ஆட்டத்தை டிராவில் முடித்தனர். குறிப்பாக ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதம் விளாசி அணியை நிலைநிறுத்தினர். தொடக்கத்தில் 2 விக்கெட்களை இழந்து சிரமத்தில் இருந்த இந்திய அணியை கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் கூட்டணி உறுதியாக முன்னேற்றி நம்பிக்கை அளித்தது.

இந்த முக்கியப் போட்டியில் பந்து வீச்சில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பதிலாக ஆகாஷ் தீப் களமிறங்கலாம். மேலும் அன்ஷுல் கம்போஜ் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங் அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறலாம்.

பேட்டிங்கில் ஷுப்மன் கில் மீண்டும் கவனம் ஈர்க்கிறார். இதுவரை 4 சதங்கள் அடித்து 722 ரன்கள் குவித்துள்ள அவர், இன்னும் 52 ரன்கள் சேர்த்தால் சுனில் கவாஸ்கரின் 1970-71-ம் ஆண்டில் படைத்த சாதனையை முறியடித்து, ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் என்ற புதிய சாதனையை படைப்பார். மேலும் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த கவாஸ்கரின் (732 ரன்கள்) சாதனையை முறியடிக்க கிலுக்கு வெறும் 11 ரன்கள் போதும்.

அதேபோல், கே.எல்.ராகுல் 511 ரன்கள் குவித்துள்ளார். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் முந்தைய போட்டியில் சதம் விளாசியதால் இந்த ஆட்டத்தில் பெரும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறார்கள். விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் காயம் காரணமாக துருவ் ஜூரெல் தொடர்ந்தும் விளையாடுகிறார்.

இங்கிலாந்து அணிக்குத் தோள்பட்டை காயம் காரணமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். இதனால் அணி பலவீனமடைந்துள்ளது. ஆலி போப் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், லியம் டாசன் ஆகியோர் நீக்கப்பட்டு ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன் மற்றும் ஜோஷ் டங்க் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி முழுக்கவே வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங்க், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் வேகப்பந்து வீச்சை முன்னெடுப்பார்கள். சுழற்பந்து வீச்சில் ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் கைகொடுக்கவுள்ளனர்.

போட்டி குறித்து இந்திய கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது: “ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்குவாரா என்பதை மைதான நிலையைப் பார்த்து முடிவு செய்வோம். ஆடுகளம் மிகவும் பசுமையாக இருப்பதால் பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவாக இருக்கலாம். பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் எப்போதும் அணிக்காக ஏதாவது செய்துவிடுவார். எனவே அவர்களின் அணிக்கு இது கடினமான நிலைமை. அர்ஷ்தீப் சிங் தயாராக உள்ளார். நாங்கள் தொடரை 2-2 என முடிக்க முழுமையாக முயற்சி செய்வோம். இந்தத் தொடர் எங்களுக்கு பெரும் கற்றல் அனுபவமாக இருந்தது. அதில் இருந்து பல விஷயங்களை கற்றுள்ளோம். இந்த கடைசி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்வோம் என்று நம்புகிறோம்.”