சென்னை: பாராகுவே நாட்டின் அசுன்சியோன் நகரில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் 2026 தொடரில் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மூன்று பதக்கங்களுடன் அசத்திய ஆனந்த்குமார்!
ஆண்களுக்கான மாரத்தான் பிரிவில் தமிழக வீரர் ஆனந்த்குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக, 500 மீட்டர் பிரிவில் வெண்கலமும், 1000 மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்ற அவர், ஒரே தொடரில் மூன்று பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதேபோன்று, ஜூனியர் பெண்களுக்கான 3000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தமிழக வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
இளம் தலைமுறைக்கு புதிய உத்வேகம்!
இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிகள் விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் இளைய தலைமுறையினருக்குப் புதிய ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஆனந்த்குமார், லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோர் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்தியுள்ளார்.



