விளையாட்டு

கிராண்ட் செஸ் டூர்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி... இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

top-news

செயின்ட் லூயிஸ்: கிராண்ட் செஸ் டூர் 2026 இறுதிச்சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா அசத்தலான வெற்றியைப் பதிவு செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

கீமருக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தொடக்கத்தில் நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் ஆதிக்கம் செலுத்தினார். முதல் ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது கிளாசிக்கல் ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ரேபிட் ஆட்டங்களிலும் பிரக்ஞானந்தா தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இரண்டு ரேபிட் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதி வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் கீமருக்கு எதிரான மொத்த ஸ்கோர் 17-3 என்ற நிலைக்கு சென்றது.

இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் செஸ் டூர் 2026 பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீரர் ஃபேபியானோ கருவானாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார். கருவானா, வெஸ்லி சோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், பட்டத்தை வெல்லும் முனைப்புடன் பிரக்ஞானந்தா களமிறங்குகிறார். இந்த வெற்றி இந்திய செஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.