சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு இந்தியாவில் கிடைக்கும் மரியாதை மற்றும் பாதுகாப்பு குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் வியப்புடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: "இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது, தோனி பல இடங்களுக்குப் பயணம் செய்ததோடு, சில போட்டிகளை மைதானத்திற்கு நேரில் வந்தும் பார்த்தார். அப்போதெல்லாம் அவருக்கு இந்தியாவில் அளிக்கப்படும் கௌரவம் அளப்பரியதாக இருந்தது.
முன்பு சச்சின் டெண்டுல்கருக்கு மட்டுமே இது போன்ற மிகப்பெரிய கௌரவம் கிடைத்து வந்தது. ஆனால், தற்போது தோனியும் அதே நிலையை எட்டியுள்ளார். இந்தியாவில் அவருக்கு ஒரு நாட்டின் பிரதமருக்கு அளிக்கப்படும் அளவிலான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவர் இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும், அவரைப் பாதுகாக்க ஒரு உண்மையான ராணுவப் படையே (Army) இருப்பது போன்ற தோற்றம் அளிக்கிறது," என வாகன் புகழ்ந்து பேசியுள்ளார்.


