திருவனந்தபுரம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இஷான் கிஷனின் அதிரடி சதம் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியுள்ளது.
இஷான் கிஷனின் காட்டடி சதம்: திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (6) ஏமாற்றமளித்தாலும், மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா (30) அதிரடி காட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
இஷான் கிஷன்: வெறும் 42 பந்துகளில் தனது கன்னி சர்வதேச டி20 சதத்தைப் பதிவு செய்தார். மொத்தம் 43 பந்துகளைச் சந்தித்த அவர், 10 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ்: அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார்.
ஹார்திக் பாண்டியா: கடைசி நேரத்தில் மின்னல் வேகத்தில் 17 பந்துகளில் 42 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
நியூசிலாந்து போராட்டம் - அர்ஷ்தீப் அதிரடி: 272 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீரர் ஃபின் ஆலன் (38 பந்துகளில் 80 ரன்கள்) இந்திய பவுலர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். எனினும், மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால் அந்த அணி தடுமாறியது.
இறுதியில் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அக்சர் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
டி20 உலகக்கோப்பை 2026 தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு கிடைத்துள்ள இந்த மெகா வெற்றி, இந்திய அணிக்கு பெரும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது. ஆட்டநாயகனாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார்.


