**டார்வின்:** தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடக்க முன்னிலை பெற்றது.
டார்வின் நகரில் நேற்று (ஆக.10) நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. தொடக்கத்தில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தாலும், நடுப்பகுதியில் டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் இணைந்து அணியை மீட்டனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் டேவிட், 52 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். கேமரூன் கிரீன் வெறும் 13 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களில் கவெனா மாபாகா மிகச் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனால் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 179 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சாதகமாக அமையவில்லை. ஒருபுறம் விக்கெட்கள் இடைவிடாது வீழ்ந்த நிலையில், ரியான்ரிக்கெல்டன் மட்டும் போராட்டம் மேற்கொண்டு 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். எனினும், அணியின் மற்ற வீரர்கள் பெரிதும் பங்களிக்கவில்லை.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் ஜோஷ் ஹேசில்வுட், பென் டுவார்ஷுயிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களைப் பெற்றனர். தனது வெற்றிகரமான சதத்துக்கு இணையான ஆட்டம் மூலம் டிம் டேவிட் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 முன்னிலை பெற்றுள்ளது. தொடரின் 2-வது டி20 போட்டி நாளை (ஆக.12) நடைபெறவுள்ளது.


