விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறுகிறார் அஸ்வின் ?

top-news



சென்னை: அடுத்த ஐபிஎல் சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இருந்து ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை கோப்பை வென்ற புகழ்பெற்ற அணி. ஆனால் கடந்த 2025 சீசனில் அணி எதிர்பார்த்த சாதனையை எட்டவில்லை. ஆரம்ப சுற்றிலேயே வெளியேறியது. அப்போது கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிலிருந்து எடுத்து, மஹேந்திர சிங் தோனி ஏற்றுக் கொண்டார். இருந்தாலும், வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை.

சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் பிரேவிஸ், நூர் அகமது, கலீல் அகமது உள்ளிட்ட சிலர் சிறப்பாக விளையாடினர். இவர்களில் சிலர் சீசன் நடுவில் அணியில் இணைந்தவர்களாகும். அடுத்த சீசனில் மீண்டும் பழைய ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்ற இலக்குடன், சிஎஸ்கே நிர்வாகம் அணிக் கட்டமைப்பில் மாற்றங்களை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இந்த நிலையில், அஸ்வின் வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக விளங்கிய அஸ்வின், அதன் பின்னர் புனே, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். கடந்த சீசனில் சிஎஸ்கே மீண்டும் அவரை ஏலத்தில் ரூ.9.75 கோடிக்கு வாங்கியது. அப்போது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப அஸ்வின் கடந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் தாக்கம் செலுத்தவில்லை. 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். 186 பந்துகள் வீசி 283 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் அடுத்த சீசனுக்கான அணித் திட்டங்களில் அவர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

மேலும், சேப்பாக்கம் மைதானத்தின் பந்துவீச்சு தன்மையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அங்கு பந்து அதிகம் சுழலாததால், நூர் அகமது, ஜடேஜா, அஸ்வின் ஆகிய மூன்று ஸ்பின்னர்களையும் ஒரே நேரத்தில் முழு 4 ஓவர் வீச வைப்பது அணிக்கு சிரமம் தருகிறது. கடந்த சீசனில் இதைப் பற்றி பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் கூட, "நமது ஹோம் கிரவுண்ட் எங்களுக்கு சாதகமாக இல்லை" என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

இதனால், அஸ்வின் வேறு அணிக்கு டிரேட் செய்யப்படவோ அல்லது முழுமையாக விடுவிக்கப்படவோ வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சில ஐபிஎல் அணிகள் அவரை தங்கள் அணியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.