அரசியல்

நான் எதுவும் சொல்வதற்கில்லை.. பொதுக்குழு குறித்த கேள்விக்கு ராமதாஸ் விரக்தி பதில் !

top-news

விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மகன் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு கூட்டம் குறித்த கேள்விகளைத் தவிர்த்து, இன்று (ஆகஸ்ட் 9) பிற்பகல் பூம்புகார் மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.

சமீபத்தில், மகன் அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 8) இரவு தள்ளுபடி செய்து, பொதுக்குழுவை நடத்த அனுமதி வழங்கியது. இதனால், அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில், அன்புமணி ராமதாஸ் தலைவராக, வடிவேல் ராவணன் பொதுச் செயலாளராக, திலகபாமா பொருளாளராக மேலும் ஓராண்டு பதவியில் தொடர்வார்கள் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், நாளை (ஆகஸ்ட் 10) நடைபெற உள்ள வன்னிய மகளிர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்க, திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் இருந்து ராமதாஸ் காரில் புறப்பட்டார். புறப்படும் போது செய்தியாளர்கள் பொதுக்குழு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, "நான் சொல்வதற்கு ஏதும் இல்லை. பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் பூம்புகார் மாநாட்டுக்கு வாருங்கள். இப்போது வேறு எதுவும் சொல்ல முடியாது," என்று கூறிவிட்டு, ஓட்டுநரிடம் காரை இயக்குமாறு கூறி புறப்பட்டுச் சென்றார்.

ராமதாஸ் பயணத்தின் போது, அவரது உடல்நிலை பாதிக்கப்படக் கூடும் என்பதால், தனியார் மருத்துவமனையின் பிரத்யேக ஆம்புலன்ஸ் ஒன்று அவருடன் இணைந்து சென்றது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அன்புமணி பொதுக்குழு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அழைப்பு விடுத்தபோது, உடல்நிலை சரியில்லையெனக் கூறி ராமதாஸ் காணொலி வழியாகவே நேற்று ஆஜரானார். அதே ஆம்புலன்ஸே இன்றும் அவருடன் பயணித்தது.