மாமல்லபுரம், ஆகஸ்ட் 9:
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரம் கான்ஃப்ளுயன்ஸ் அரங்கில் நடைபெற்றது. இதில், 2026 ஆகஸ்ட் மாதம் வரை தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட முக்கிய பதவிகள் தொடர்வது உள்ளிட்ட 19 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், “தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் வெறுக்கப்படும் ஆட்சி தற்போது மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது” எனக் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சாரக் கட்டண உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா மற்றும் போதைப்பொருள் பரவல், வேளாண் வளர்ச்சி வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
பொதுக்குழு தீர்மானங்களில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
-
பதவிக்கால நீட்டிப்பு – 2026 ஆகஸ்ட் மாதம் உட்கட்சி தேர்தல் நடைபெறும் வரை, தலைவர் பதவியில் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளராக ச. வடிவேல் இராவணன், பொருளாளராக ம. திலகபாமா தொடர ஒப்புதல்.
-
வன்னியர் உள்இடஒதுக்கீடு – தமிழக அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தீர்மானம்.
-
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு – வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை.
-
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம் – வன்னியர் இடஒதுக்கீடு பரிந்துரை உள்ளிட்ட கடமைகளை நிறைவேற்றாதது குறித்த கண்டனம்.
-
அன்புமணி பயணத்திற்கு ஆதரவு – தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வெற்றிபெறச் செய்ய உறுதி.
-
பெண்கள் பாதுகாப்பு – திராவிட மாடல் அரசின் தோல்வியை கண்டனம்.
-
போதைப்பொருள் தடுப்பு – கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை.
-
மதுவிலக்கு – தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கே கட்சியின் இலக்கு.
-
மின்சாரக் கட்டண குறைப்பு – 4 முறை உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க கோரிக்கை.
-
தொழில் முதலீடு குறித்த வெள்ளை அறிக்கை – திமுக அரசின் முதலீடு, வேலைவாய்ப்பு தரவுகள் பொய் என குற்றச்சாட்டு; விவரங்களை வெளியிட கோரிக்கை.
-
தடுப்பணைகள் கட்டும் திட்டம் – காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் தடுப்பணைகள் அமைக்க அரசு இயக்கம் தொடங்க வேண்டும்.
-
நதிகள் இணைப்பு – காவிரி - கோதாவரி திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
-
கல்வித் திட்ட நிதி – மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,151 கோடியை உடனடியாக வழங்க கோரிக்கை.
-
ஆசிரியர் நியமனம் – ஒரு லட்சம் ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்க வேண்டும்.
-
கலைக் கல்லூரி பணியிடங்கள் – முதல்வர் மற்றும் 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை.
-
மோசடித் திட்டங்களுக்கு கண்டனம் – மக்களை ஏமாற்றும் திமுக அரசுக்கு கண்டனம்.
-
பழைய ஓய்வூதியத் திட்டம் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் அமல்படுத்த கோரிக்கை.
-
வேலைவாய்ப்பு – அரசுத் துறைகளில் காலியிடங்களை நிரப்பி 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை.
-
தமிழக மீனவர்கள் பிரச்சனை – சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்படுவதை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை.
கூட்டத்தில், திமுக அரசின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் 7,000 படுகொலைகள் நடந்துள்ளன என்றும், மாநிலத்தில் எவருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கத் தவறியதும், வேளாண் வளர்ச்சி வீழ்ச்சியும், போதைப்பொருள் பரவலும் தமிழகத்தின் எதிர்காலத்தை ஆபத்துக்குள் தள்ளுவதாகக் குறிப்பிடப்பட்டது.
பொதுக்குழுவின் நிறைவில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான அரசை அகற்ற பாமக முழு உழைப்பையும் செலுத்தும் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.


