அரசியல்

"துரோகத்துக்கான நோபல் பரிசுக்கு இபிஎஸ் தகுதியானவர்" - நீக்கம் குறித்து செங்கோட்டையன் ஆவேசம்!

top-news

அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இன்று (நவம்பர் 1, 2025) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், எடப்பாடி பழனிசாமியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில் பதிலடி கொடுத்தார்.

செங்கோட்டையன் அடுக்கிய முக்கியப் பதில்கள்:

துரோகம் செய்தது யார்? "நான் 1972 ஆம் ஆண்டு முதல் 53 ஆண்டு காலமாக அதிமுகவில் இருந்து வருகிறேன். இந்த கட்சிக்கு துரோகம் செய்தவன் நானில்லை. பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமிதான். துரோகத்திற்கான நோபல் பரிசுக்கு அவர் தகுதியானவர்."

பதவிப் பின்னணி: சசிகலாவிடம் இருந்து எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் பதவியைப் பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள். ஈபிஎஸ்-ஐ முதல்வராக்க அனைத்து உதவிகளையும் செய்தவன் நான். என்னை அவரே நீக்கியது அதிர்ச்சியளிக்கிறது.

திமுக 'பி' டீம் குற்றச்சாட்டு: என்னை திமுகவின் 'பி' டீம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். ஆனால், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குச் சிறிதும் அழுத்தம் கொடுக்காத ஈபிஎஸ்தான், உண்மையான 'ஏ1' குற்றவாளியைப் போலச் செயல்படுகிறார்.

மறைக்கப்பட்ட புகைப்படம்: என் நீக்கத்திற்குப் பதிலடியாக, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள எனது அலுவலகத்தில் இருந்த விளம்பரப் பலகையில், பழனிசாமியின் படத்தை மறைத்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டுள்ளது.


தொண்டர்களின் எண்ணம்: "எல்லோரும் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பது பல கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வுப்பூர்வமான கருத்தாகும். நான் இந்தக் கருத்தைத்தான் பொதுச் செயலாளரிடம் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை."

எம்ஜிஆர் வழியில்: பிரிந்து சென்றவர்களை 'மறப்போம், மன்னிப்போம்' என்ற எம்ஜிஆர் பாணியில் அரவணைத்தால்தான் அதிமுகவால் மீண்டும் வெல்ல முடியும் என்ற நோக்கத்தில்தான் செயல்பட்டேன். எனது நீக்கம் எனக்கு வேதனை இல்லை, மகிழ்ச்சியே அளிக்கிறது.


"கட்சி விதிகளின் அடிப்படையில் என்னை நீக்கியது செல்லாது. எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எனது ஆதரவாளர்களுடனும், வழக்கறிஞரிடமும் ஆலோசித்து முடிவெடுப்பேன்."

மேலும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவும், டி.டி.வி. தினகரனும் செங்கோட்டையன் நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈபிஎஸ்ஸின் செயல்பாடு கட்சியை வளர்க்காமல், அழிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக சசிகலா விமர்சித்துள்ளார்.